திருப்பூர்: செல்போன் கடையில் வடமாநில வாலிபர்கள் கைவரிசை..!
|திருப்பூர் அருகே செல்போன் கடையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியைச் சேர்ந்த சனுப் என்பவர் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி, லட்சுமி நகர் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த 27ந்தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் மீண்டும் மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பல்லடம் அருள்புரம் பகுதியில் உள்ள சேடபாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைகளை தூக்கிக்கொண்டு வந்த 2 வடமாநில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடத்தொடங்கினர்.
அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் லட்சுமி நகர் செல்போன் கடையில் திருடியது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் சகானி மகன் சுதிர் குமார் (22) மற்றும் சங்கர் தாகூர் மகன் சஞ்சித் தாகூர் (32) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 34 ஸ்மார்ட் செல் போன்கள், 31 சாதா செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.