கோயம்புத்தூர்
தலைமறைவான கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
|சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியவர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவான அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி
சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியவர்கள் விபத்தில் பலியான சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவான அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நகை பறிக்க முயற்சி
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் குற்ற வழக்குகளில் சிக்கிய 5 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கடந்த 6-ந் தேதி பள்ளியில் இருந்து தப்பினர். இதில் 2 பேரை செங்கல்பட்டு போலீசார் பிடித்து மீண்டும் பள்ளியில் அடைத்தனர்.
ஆனால் திருச்சி, மதுரையை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 2 பேர், கோவைக்கு கடந்த 22-ந் தேதி வந்தனர். பின்னர் தங்களது கூட்டாளிகள் 2 பேருடன் கோவை குனியமுத்தூரில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை திருடிக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்தனர். தொடர்ந்து கடை வீதியில் ஒரு பெண்ணிடம் நகை பறிக்க முயன்றனர்.
சாலை விபத்தில் பலி
அது முடியாததால், கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்று, ஏற்கனவே திருடி வைத்திருந்த நகைகளை விற்று ஆடம்பர செலவு செய்தனர். பின்னர் அங்கிருந்து 'டிப்-டாப்' உடை அணிந்து பொள்ளாச்சிக்கு திரும்பி வந்தனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பியவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அவர்களது கூட்டாளிகள் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர். வடுகபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்தபோது சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் வந்த கூட்டாளிகள், தாங்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
தேடும் பணி
இந்த சம்பவத்தை அறிந்த செங்கல்பட்டு போலீசார் பொள்ளாச்சிக்கு விரைந்து வந்து, தப்பி சென்ற 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொள்ளாச்சியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றது, குனியமுத்தூரில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தொடர்பான கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒருவர், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்தவராக இருக்கலாம் என்று செங்கல்பட்டு போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் பொள்ளாச்சி தனிப்படை போலீசாரும், தலைமறைவாக இருக்கும் அவர்களை பிடிக்க கோவை, மட்டுமின்றி கேரள பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.