சென்னை
கோடம்பாக்கம்: தாயை அடித்ததால் ஆத்திரம் - தட்டிக் கேட்ட அண்ணனுக்கு சரமாரி கத்தி குத்து..!
|கோடம்பாக்கத்தில் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மின் வாரிய ஊழியரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
போரூர்:
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு தங்கதுரை (வயது 38) உதயகுமார் (37) என 2மகன்கள் உள்ளனர். கார் டிரைவர் வேலை பார்த்து வரும் தங்கதுரை மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். மின் வாரிய ஊழியரான உதயகுமார் அதே பகுதி பாரதீஸ்வரர் காலனியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பார்வதி தனது இளைய மகன் உதயகுமார் வீட்டிற்கு சென்றார் அப்போது மதுபோதையில் இருந்த உதயகுமார் தாயுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் வீடு திரும்பிய பார்வதி உதயகுமார் தன்னை அடித்துவிட்டதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தங்கதுரை தம்பி உதயகுமார் வீட்டிற்கு நேரில் சென்று "ஏன் தாயை அடித்தாய்" என்று கேட்டார் அப்போது சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது திடீரென வீட்டிற்குள் சென்று கத்தியுடன் வந்த உதயகுமார், அண்ணன் என்றும் பாராமல் தங்கதுரையை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கழுத்து மற்றும் வயிற்றில் குத்துப்பட்டு படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.