கடலூர்
கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்
|திருவண்ணாமலையில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.72½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். 84 முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் ஏ.டி.எம். எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் வெட்டி, அதில் இருந்த ரூ.72½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் இந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்த பணத்துடன் காரில் தப்பிச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து திருவண்ணாமலை அருகில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் உடனடியாக உஷார்படுத்தப்பட்டனர்.
84 இடங்களில் சோதனை
குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, சோதனை செய்தனர். வாகனங்களில் கொண்டு வரப்பட்ட அனைத்து பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பைகளையும் சோதனை செய்தனர்.
இது தவிர ஆல்பேட்டை, வான்பாக்கம், பண்ருட்டி, திட்டக்குடி, வல்லம்படுகை, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் தவிர 84 முக்கிய இடங்களிலும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும் படியாக யாராவது தங்கி உள்ளார்களா? என்றும் சோதனை செய்தனர்.
கண்காணிப்பு
இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏ.டி.எம். மையங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காவலாளி உள்ள ஏ.டி.எம். மையங்கள், காவலாளி இல்லாத ஏ.டி.எம். மையங்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். காவலாளி உள்ள ஏ.டி.எம். மையங்களில் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், காவலாளி இல்லாத ஏ.டி.எம். மையங்களில் தீவிர கண்காணிப்பிலும் போலீசார் ஈடுபட்டனர். விடிய, விடிய இந்த சோதனை நடந்தது.