< Back
மாநில செய்திகள்
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்; போலீசார் அறிவுறுத்தல்
தேனி
மாநில செய்திகள்

அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும்; போலீசார் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
13 Sept 2023 2:45 AM IST

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மோதல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ராஜாதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமை தாங்கினார். இதில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அனுமதிக்கப்பட்ட இடங்கள்

கூட்டத்தில், ஆண்டிப்பட்டி நகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இந்து அமைப்புகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து போலீசார் கூறினர். அதன்படி, விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெறும் ஊர்வலத்தில் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையிலான பாடல்களை ஒளிபரப்ப கூடாது. மோதல்களை தூண்டும் வண்ணம் செயல்படக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும். ஊர்வலம் செல்லும் அமைப்பினர், தங்களுக்கு கொடுத்த நேரத்துக்குள் ஊர்வலத்தை தொடங்கி, முடித்துச்செல்ல வேண்டும்.

அதேபோல் ஊர்வலம் முடிந்து விநாயகர் சிலைகளை கரைக்கும்போது, வைகை ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும். தமிழக அரசின் சட்ட திட்டங்களின் படியும், போலீசாரின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படியும் செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்