விஷ சாராய உயிரிழப்பு: சி.பி.ஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி
|கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூடியதும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததால் பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:--
கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று சட்டப்பேரவையில் பேச வேண்டும் என அனுமதி கேட்டும், கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினோம்.
மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்சனைகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என பல முறை குரல் கொடுத்தோம்; விஷச்சாராயம் மக்களின் உயிர் பிரச்சனை; அதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள். நீதி நிலையை நிலை நாட்ட உண்மை குற்றவாளியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை. மருந்து பெயரை மாற்றி கூறி விட்டு இருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகிறார்" என்றார்.