விஷ சாராய விவகாரம்: கள்ளக்குறிச்சி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி
|கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது.சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் ரஜத் சதுர்வேதி பணியமர்த்தப்பட்டுள்ளார். இவ்வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனையும் நடத்த உள்ளார். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்ல முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.மேலும் இறப்புக்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன,
இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.