தமிழ் ஆசிரியையிடம் பேசிய கவிஞர் வைரமுத்து - அமைச்சரின் பள்ளிக்கூட ஆய்வின் போது ருசிகர சம்பவம்
|“இரண்டு கண்கள் இல்லை என்றாலும், 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்” என்று ஆசிரியைக்கு வைரமுத்து தன்னம்பிக்கை அளித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது கவிஞர் வைரமுத்து எழுதிய, 'ஓ என் சமகால தோழர்களே' என்ற கவிதைத் தொகுப்பு குறித்து தமிழ் ஆசிரியை தமிழ்ச்செல்வி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மாணவர்களோடு வகுப்பறையில் உட்கார்ந்து இதனை கவனித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தனது செல்போனில் கவிஞர் வைரமுத்துவை தொடர்பு கொண்டு தமிழ் ஆசிரியையிடம் பேச வைத்தார். அவரிடம், "இரண்டு கண்கள் இல்லை என்றாலும், 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்" என்று ஆசிரியைக்கு வைரமுத்து தன்னம்பிக்கை அளித்தார்.
மேலும் வைரமுத்துவிடம் அவர் எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை ஆடியோ வடிவில் முழுமையாக கேட்டதாகவும், அவரது பாடல்கள் அனைத்து தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறினார். இதைக் கேட்ட வைரமுத்து அவருக்கு நன்றி தெரிவித்து அவரது பணி தொடர வாழ்த்தினார். இந்த உரையாடல் அங்கு இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.