செங்கல்பட்டு
செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
|செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே போராட்டம் நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் குணசேகரன், பசுமை தாயக மாவட்ட தலைவர் டில்லிபாபு முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏவும், மாநில வன்னியர் சங்க செயலாளருமான திருக்கச்சூர். ஆறுமுகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் பொன்.கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோபாலகண்ணன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் என்.எஸ்.ஏகாம்பரம், முன்னால் ஒன்றிய குழுத்தலைவர் வாசு, வக்கீல் சக்ரபாணி, ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதைப் பொருட்களை முற்றிலுமாக தமிழக அரசு ஒழிக்க வலியுறுத்தி காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் குழு பணி செயலாளர்கள் செல்வகுமார் மற்றும் இசக்கிபடையாச்சி ஆகியோர் கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தமிழக அரசு முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.
மேலும் மது ஒழிப்பு பிரசார பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதளை தொடர்ந்து போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட தலைவர் உமாபதி, கிழக்கு மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், செவிலிமேடு செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.