சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
|வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை,
சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் அத்துடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
வன்னியர் 10.5% உள் இடஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக மூன்று ஆண்டுகளாக பேசுகிறோம். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது. இடைத்தேர்தலை ஒட்டி தொகுதியில் அமைச்சர்கள் ஒரு கருத்து பேசுகின்றனர். ஆனால் பேரவையில் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.