பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது - தொல்.திருமாவளவன் பேச்சு
|அரசியலில் எத்தகைய பின்னடைவுகளை சந்தித்தாலும் பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்க பா.ஜ.க. முயல்வதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சை அரசன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் சிந்தனை செல்வன், ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கோ.ஆதவன், ந.செல்லத்துரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.ஐ. (எம்.எல்.) மாநில செயலாளர் பழ.ஆசைதம்பி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா?
ஆர்ப்பாட்டத்தின் போது தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உள்ளிட்ட சனாதன சக்திகளால் வன்முறை தூண்டப்படுகிறது. சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து தி.மு.க. அரசுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுக்கள் வன்முறையை தூண்டும் வகையில்தான் இருக்கின்றன.
தி.மு.க. ஆட்சியில் கி.வீரமணியின் காரை சூழ்ந்து அச்சுறுத்துவதை பார்க்கும் போது தமிழ்நாட்டில் காவல்துறை பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்று சந்தேகிக்க தோன்றுகிறது. தமிழகத்தில் காவல்துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும்.
பா.ம.க., பா.ஜ.க.
அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் (கூட்டணியில்) நாங்கள் (வி.சி.க.) இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான அணியை தி.மு.க. ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறோம்.
தேர்தல் நெருங்க, நெருங்க...
அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் வரும் போது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது போன்று தமிழகத்திலும் தேர்தல் நெருங்க நெருங்க என்ன செய்யப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. காரணம், அது நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையிடத்தில் இருந்து தான் முடிவு செய்யப்படும்.
இந்த ஆபத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுட்டிக்காட்டத் தான் நாங்கள் இங்கு (வள்ளுவர்கோட்டம்) கூடி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.