12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம்: இன்று சென்னை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
|நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் 10 நாட்களில் 12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செல்கிறார்.
சென்னை,
கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடத்திய பாத யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
அடுத்த நாள் (28-ந் தேதி) தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டியதோடு, பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். நெல்லையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.
இதற்கிடையே தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். இதற்காக அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குறிப்பாக கடந்த 5 நாட்களில் 2-வது முறையாக மோடி இன்று (திங்கட்கிழமை) தமிழகத்துக்கு வருகிறார்.
மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வரும் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் செல்கிறார்.
அங்கு மதியம் 3.30 மணிக்கு அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார். அதனைத்தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இதில் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் பங்கேற்கிறார்கள். இதற்காக பிரமாண்ட மேடை மற்றும் மோடியை வரவேற்று கட்அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 6.35 மணிக்கு விமானம் மூலமாக தெலுங்கானா செல்கிறார். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த போலீசார் மற்றும் ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் உள்பட மொத்தம் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பாக்கம் அணுமின் நிலைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமரின் பாதுகாப்புக்கு 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டுமல்லாது 5 அடுக்கு பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுதவிர, சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் வருகையையொட்டி சென்னை மற்றும் கல்பாக்கம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 'டிரோன்'கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் இந்த தடை உத்தரவு ஏப்ரல் 29-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறி 'டிரோன்'கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முடிவு செய்யப்பட்டு, அதில் பங்கேற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட பிறகு, மீண்டும் 6 முறை பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக தொடர் வருகையால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.