பிரதமர் மோடி இன்று சேலத்தில் பிரசாரம்
|சேலம் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை,
நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன் முறையாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பங்கேற்றார். அவருக்கு சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று இரவு கோவையில் தங்கினார்.
இதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு காலை 11.40 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகிறார்.
அங்கு மதியம் 1 மணியளவில், சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா சார்பில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டம் நடக்கும் மைதானம் பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.இதனிடையே, சேலத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.