'புயலுக்கும், வெள்ளத்துக்கும் வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அடிக்கடி வருகிறார்' - அமைச்சர் அன்பில் மகேஷ்
|வறுமையை ஒழிப்பேன் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, தற்போது தி.மு.க.வை ஒழிப்பேன் என்று கூறி வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நடைபெற்ற 'எல்லோருக்கும் எல்லாம்' பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். அழிப்பேன், ஒழிப்பேன் என்கிறார். ஆனால் புயல் தாக்கியபோதும், வெள்ளம் பாதித்தபோதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோதும், பல போராட்டங்களில் விவசாயிகள் மாண்டுபோனபோதும், கவர்னர் என்ற பெயரில் ஒருவரை இங்கு உட்கார வைத்துவிட்டு பிரச்சினைகள் ஏற்படும் சமயங்களிலும், நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போதும் கூட வராத பிரதமர் மோடி, தற்போது அடிக்கடி வருகிறார் என்றால் அது தேர்தலுக்காக மட்டும்தான்.
மோடி ஆட்சிக்கு வரும்போது வறுமையை ஒழிப்போம் என்றார். ஆனால் வறுமையை ஒழித்தாரா? தி.மு.க.வை ஒழிப்பேன் என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சுமார் 2.2% பேர் மட்டும்தான் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி ஆயோக் கூறுகிறது. அந்த மக்களுக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்று அதற்கான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார்.
இதையெல்லாம் பார்த்து அவர்களுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. 'திராவிட மாடல் என்ற பெயரில் அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்திக் கொண்டே போனால் நாங்கள் எப்படி அரசியல் செய்வது?' என்பதுதான் பிரதமர் மோடியின் ஒரே கவலை."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.