பிரதமர் மோடி வருகை: டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இன்று மதுரை வருகை
|பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி மதுரை வருகிறார்.
மதுரை,
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகிறார். அன்று மதியம் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மதுரை கருப்பாயூரணி அடுத்துள்ள வீரபாஞ்சான் டி.வி.எஸ்.லட்சுமி பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத்திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார். இதில் பல்வேறு நிறுவன தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அங்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் கார் மூலம் சாலை வழியாக மாலை 6.45 மணிக்கு பசுமலையில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று தங்குகிறார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து 28-ந் தேி காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து கார் மூலம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு இன்று அல்லது நாளை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் மதுரை வர உள்ளனர். அதில் டி.ஐ.ஜி. உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழுவினர் வருகிறார்கள். அவர்கள் பிரதமர் செல்லும் பாதைகள், தங்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் பிரதமர் செல்லும் பாதையில் பயண ஒத்திகை நாளை நடைபெற உள்ளதாக தெரியவருகிறது.
இது தவிர பிரதமர் வருகையையொட்டி மதுரையில் 2 டி.ஐ.ஜி, 11 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 100 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 5 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் மற்றும் அதிகாரிகள் வருகிற திங்கட்கிழமை மதுரை வர உள்ளனர்.