பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
|'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெற உள்ளன. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் நடைபெறும் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் நடைபெறும் இந்த விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் மற்றும் உயர் காவல் அதிகாரிகள், மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.