'பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி நேரலை தேர்தல் விதி மீறல்' - தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
|பிரதமரின் தியானத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் நாளை தொடங்கி 1-ந்தேதி வரை பிரதமர் மோடி தியானம் செய்ய உள்ளார். இதற்காக நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் தியானத்தில் ஈடுபடுவதை நேரலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பிரதமரின் தியானத்தை நேரடி ஒளிபரப்பு செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும், இதனை நேரலை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தியானம் செய்வது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அவரது தியானம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் என்பதால், 1-ந்தேதி நடைபெறும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 48 மணி நேரத்திற்கு முன்பு ஓய்ந்த பிறகும் கூட மோடிக்கும், அவரது கட்சிக்கும் இது ஒரு பிரசாரத்தைப் போல் அமையும் என்றும், இது தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் மீறும் செயல் என்றும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.