< Back
மாநில செய்திகள்
பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

பிரதமர் மோடி ராம ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார்: கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
12 Aug 2024 4:01 PM GMT

உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் நடைபெற்ற கம்பன் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

சிறுவயதில் எனது பாட்டி 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமேசுவரத்திற்கு யாத்திரை வந்ததை பற்றியும், இங்குள்ள ராமாயண தொடர்புகளையும் எனக்கு கதைகளாக கூறினார். ஒவ்வொரு இந்தியருக்கும் ஒருமுறையாவது ராமேசுவரத்திற்கு வந்து வழிபட வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக உள்ளது. நவீன இந்தியாவை உருவாக்கிய அப்துல் கலாமும் இங்கேதான் பிறந்தார்.

கம்பர் கவிஞர் மட்டும் கிடையாது. அவர் ஒரு சித்தர் மற்றும் மகரிஷியும் ஆவார். வால்மீகியின் ராமாயாணம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தை கற்றவர்களால் மட்டுமே வால்மீகி ராமாயணத்தை படிக்க முடிந்தது. ஆனால் கம்பர், ராமரின் வாழ்க்கையை, சாமானிய மக்கள் மனதிலும் கொண்டு சென்றதில் முன்னோடியாக இருந்தார். கம்பரின் பாரம்பரியம் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டும்.

நமது பாரத நாட்டின் ஆன்மாகாவ பகவான் ராமர் இருக்கிறார். நாட்டில் ராம ராஜ்ஜியத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வருகிறார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வகையில் நாடு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர். நாம் வெவ்வேறு மொழி, இனம், மதங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடாக, குடும்பமாக உள்ளோம். உலகப் பொருளாதாரத்தில் இனிவரும் காலத்தில் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்