< Back
மாநில செய்திகள்
அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் - ஓ.பன்னீர் செல்வம்
மாநில செய்திகள்

அதிமுக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் - ஓ.பன்னீர் செல்வம்

தினத்தந்தி
|
24 Jan 2023 8:04 PM IST

அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

சென்னை,

புதியநீதிக்கட்சி தலைவர் சண்முகத்தை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டார். அதன்பின் செய்தியாளர்களை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், இன்றைக்கு இந்தியாவை வல்லரசாக ஆக்கிக்காட்டுகின்ற தீவிர முயற்சியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில் பாஜக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதிமுக ஆதரவு அளிக்கும் என்ற எங்களின் நிலைப்பாட்டை நான் தெரிவித்திருந்தேன். அந்த நிலைப்பாட்டோடு புதிய நீதிகட்சி தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து அரசியல் சூழ்நிலை குறித்து பேசினோம்.

இடைத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று நாங்கள் கூறிவிட்டோம். பாஜக இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவு தருவோம் என்று கூறியுள்ளோம்.

ஈபிஎஸ் அணியுடன் பாஜக கூட்டணி வைத்தால் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது' என்றார்.

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்று ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், பொதுவாகவே தேர்தல் வேட்புமனு முடிவடைவதற்கு முன்னால் பல்வேறு கட்சிகள் நிலைப்பாடே மாறுகின்ற சூழ்நிலைக்கு ஏற்படும். அந்த சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் தங்கள் நடைமுறையை மாற்றிக்கொள்வார்கள் என்பது தான் கடந்த காலத்தின் உண்மை.

எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் கூறிவிட்டோம். மற்ற கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் எப்படி கூற முடியும்.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவோம்.

பிரிந்து இருக்கின்ற அதிமுகவின் அத்தனை பிரிவுகளும் ஒன்றுசேரவேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு அதிமுக தொண்டர்கள் நிலைப்பாடு.

அதிமுக ஒன்றுபட்டு தேர்தல் களத்தில் நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம்.

(அதிமுகவின்) இரு அணிகளும் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி உங்களிடம் எப்போது கூறினார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், எங்களை சந்திக்கும்போதெல்லாம் அவர் தங்களுடைய விருப்பத்தை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை நீங்கள் நேரில் சந்திப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், ஏற்கனவே அவர்களது நிலைப்பாட்டை உலகமகா அரசியல் வித்தகர் ஜெயக்குமார் கூறிக்கொண்டே இருக்கிறார்' என்றார்.

LIVE : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் ஓபிஎஸ் சந்திப்பு | நேரலை காட்சிகள்

மேலும் செய்திகள்