< Back
மாநில செய்திகள்
வளர்ப்பு தந்தை மீது பிளஸ்-2 மாணவி பாலியல் புகார்
சேலம்
மாநில செய்திகள்

வளர்ப்பு தந்தை மீது பிளஸ்-2 மாணவி பாலியல் புகார்

தினத்தந்தி
|
21 March 2023 1:00 AM IST

கன்னங்குறிச்சி:-

சேலம் கன்னங்குறிச்சியில் வளர்ப்பு தந்தை மீது பிளஸ்-2 மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் தொல்லை

சேலத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினருடன் லைன்மேட்டில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் மாணவி கூறியிருப்பதாவது:-

என்னை சிறுவயதிலேயே அனாதை இல்லம் ஒன்றில் இருந்து ஒருவர் தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் எனக்கு சரியாக உணவு கொடுக்காமல் அடித்து துன்புறுத்தி வருகிறார்.

மேலும் எனது வளர்ப்பு தந்தை, மற்றொரு நபருடன் சேர்ந்து கொண்டு என்னிடம் தகாத வார்த்தையால் பேசியதுடன் பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.

கொலைமிரட்டல்

இதுகுறித்து வெளியே கூறினால் என்னை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி வரும் எனக்கு இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. பாலியல் தொல்லை குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

இந்த மனு குறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உரிய விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

ஆட்டோ டிரைவருடன் பழக்கம்

அதன்பேரில் மாணவியின் புகார் குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து சம்பந்தப்பட்ட மாணவியிடமும், அவரது வளர்ப்பு தந்தையிடமும் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, 17 வயதான அந்த மாணவிக்கும், ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள ஆட்டோ டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த மாணவியின் வளர்ப்பு தந்தை மற்றும் மாமா ஆகியோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மீது புகார் செய்துள்ளனர்.

மாணவியிடம் விசாரணை

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாணவியுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. இதனை மாணவியின் வளர்ப்பு தந்தையும், அவரது மாமாவும் கண்டித்ததால் அவர்கள் மீது பொய்யான தகவலை பரப்பி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வளர்ப்பு தந்தை மீது பொய் புகார் கூறியது ஏன்? என்பது குறித்து அந்த மாணவியிடம் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்