விழுப்புரம்
பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்
|காதலனை கத்தியால் குத்திவிட்டு பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும், பக்கத்து கிராமத்தை சேர்ந்தவரும், அதே பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருபவருமான 17 வயதுடைய மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு இருவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
காதலனுக்கு கத்திக்குத்து
அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். ஏரிக்கரையில் காதல் ஜோடி தனிமையில் இருப்பதை கண்ட அவர்கள், மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தினர். பின்னர் 3 பேரும் காதல் ஜோடியிடம் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் 3 பேரும், அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரில் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த கத்தியால் மாணவரை சரமாரியாக குத்தினார். இதில் அந்த மாணவருக்கு தலை, கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் கூச்சலிட முயன்ற அந்த மாணவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
பாலியல் பலாத்காரம்
பின்னர் கத்தி முனையில் காதலன் கண்எதிரே அந்த மாணவியை 3 பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். வலி தாங்க முடியாமல் அந்த மாணவி கதறினார். எனவே காதல் ஜோடியிடம் இருந்த 2 செல்போன், நகையை பறித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதையடுத்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று காதல் ஜோடி கூச்சலிட்டது. இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள், ஓடிவந்து இருவரையும் மீட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காதல் ஜோடியின் உறவினர்கள் விரைந்து வந்து, இருவரையும் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
இது பற்றி அறிந்ததும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்தீபன் மற்றும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவம் நடந்த ஏரிக்கரையை பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் மாணவரிடம் விசாரணை நடத்தினர்.
காதலன் கண் முன்னே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.