திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; போலீசார் விசாரணை
|ஊத்துக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவி தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரகம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களது மகள் ஆர்த்தி (வயது 17). சீர்தெஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த ஆர்த்தி தற்போது நடைபெற்று வரும் ஆண்டுத் தேர்வு எழுதி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த மாணவி ஆர்த்தி மின்விசிரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த தாய் புஷ்பலதா தூக்கில் தொங்கிய நிலையில் மகள் தற்கொலை செய்துக்கொண்டதை கண்டு அலறி துடித்தார்.
விசாரணை
இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சத்தியபாமா மற்றும் போலீசார் ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கடந்த 6 மாதங்களாக ஆர்த்தி உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தற்கொலைக்கு முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆர்த்தியின் சகோதரியும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இருந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.