கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு - காதலன் கைது
|கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 17 வயதுடைய மகள் இருந்தனர். இதில் மகள் மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவியும், புதுச்சத்திரம் நவனி பகுதியை சேர்ந்த செல்போன் கடையில் வேலை பார்த்து வரும் செந்தில் மகன் அரவிந்த் (வயது 23) என்பவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கருவை கலைக்க மருந்துக்கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக மாணவியை சிகிச்சைக்காக மல்லசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து மாணவியின் காதலன் அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.