திருவள்ளூர்
பொதட்டூர்பேட்டை அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை
|சென்னையில் உள்ள கல்லூரியில் பெற்றோர் சேர்க்காததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் தடுத்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பொதட்டூர்பேட்டை,
பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜு பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி வளர்மதி (38). இவர்களது மகள் ஜனனி (17) பிளஸ்-2 முடித்து கல்லூரி படிப்பை சென்னையில் தொடர ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கான பண வசதி இல்லாததால் பெற்றோர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள கல்லூரியில் சேர்ப்பதாக தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த ஜனனி நேற்று காலை தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மனமுடைந்த மாணவி ஜனனி தனது அறை கதவை பூட்டி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது மாணவி ஜனனி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் பொதட்டூர்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்த ஜனனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் ஜனனியின் உறவினர்கள் நாங்கள் இது குறித்து புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் எங்கள் மகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கொடுக்க மாட்டோம் என கூறி போலீசாரை தடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது. அதன் பிறகு ஆர்.கே. பேட்டையில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உறவினர்களை சமாதானம் செய்து
ஜனனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜனனியின் தந்தை செல்வம் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.