காஞ்சிபுரம்
காஞ்சீபுரத்தில் ஓரிக்கை அருகே பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை
|காஞ்சீபுரத்தில் ஓரிக்கை அருகே அடிக்கடி டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிளஸ்-2 மாணவி
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கற்பகம். இவர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஹேமலதாவின் பெற்றோர் அவரை ஒழுங்காக படித்து நல்ல மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரை கூறி கண்டித்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதனால் மனம் உடைந்த ஹேமலதா பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் ஹேமலதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார், மாணவி ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.