புதுக்கோட்டை
ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
|புதுக்கோட்டையில் தலை முடியை வெட்டாமலும், தாடியுடனும் பள்ளிக்கு வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிளஸ்-2 மாணவர்
புதுக்கோட்டை அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கண்ணையா. இவர் புதுக்கோட்டையில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 16). இவர் புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாதேஸ்வரன் தலை முடியை அதிகம் வளர்த்தப்படியும், முகத்தில் தாடியுடனும் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் மாணவரை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த போது மாணவர் மாதேஸ்வரனை தலை முடியை வெட்டி விட்டும், முகத்தில் தாடியை எடுத்து விட்டு வரும்படியும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவரை பள்ளியை விட்டு அனுப்பியதாக கூறப்படுகிறது.
தூக்கில் பிணமாக தொங்கினார்
இந்த நிலையில் பள்ளி முடிந்ததும் மாலையில் வெகுநேரமாகியும் மாதேஸ்வரன் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி ஆசிரியர்களை மாணவரின் அக்காள் மகரஜோதி செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். மேலும் அவருடன் படிக்கும் சக மாணவர்களிடம் விசாரித்திருக்கின்றனர். இதில் பள்ளியில் இருந்து மாதேஸ்வரன் காலை 11 மணிக்கு வெளியே அனுப்பப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் மாணவர் மாதேஸ்வரனை தேடி அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் பள்ளிக்கு வந்தனர். இதற்கிடையில் பள்ளியின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள மரத்தில் மாணவர் மாதேஸ்வரன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடலை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவரின் உடலை இறக்கி நடுரோட்டில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
மாணவர் மாதேஸ்வரன் சாவுக்கு பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கிடையில் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்ப முயன்றனர்.
ஆனால் உடலை எடுத்து செல்ல அனுமதிக்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். பின்னர் நள்ளிரவு 12.10 மணிக்கு மேல் ஆம்புலன்சில் மாதேஸ்வரனின் உடலை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு சென்றனர்.
பள்ளியில் விசாரணை
இந்த நிலையில் இன்று காலை மாணவரின் உறவினர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பின் மறியலை கைவிட்டனர்.
இதற்கிடையில் மாணவர் தற்கொலை தொடர்பாக அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். மேலும் மாணவரின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் மீது குற்றம்சாட்டினர்.
உடலை பெற்றனர்
இதற்கிடையே மாணவர் மாதேஸ்வரனின் உடலை வாங்க மறுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும். மாணவர் சாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் மாணவர் மாதேஸ்வரன் தற்கொலை தொடர்பாக சந்தேக மரணமாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவரின் குடும்பத்தினர், உறவினர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பின் மாதேஸ்வரனின் உடலை அவரது பெற்றோர் இரவு 7.20 மணி அளவில் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் அவரது உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாணவர் தற்கொலை சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.