< Back
மாநில செய்திகள்
எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி

தினத்தந்தி
|
7 Oct 2023 12:43 AM IST

கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளி

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சிலர் சாதி பிரச்சினையை தூண்டிவிடுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழையூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டது.

இதையடுத்து மழையூர் பள்ளியில் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் 2 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்கொலை முயற்சி

இதுதொடர்பாக காலாண்டு தேர்வை புறக்கணித்த மாணவர்கள் சிலர் புதுக்கோட்டைக்கு சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் 2 ஆசிரியர்கள் இட மாறுதலை திரும்ப பெற வேண்டும் எனவும், வேறு சில ஆசிரியர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தநிலையில் இப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் கருப்பட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 17) என்ற மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் எறும்பு மருந்தை தின்றுவிட்டு மயங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவனை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் சேர்க்கை குறைந்தது...

மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். இப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக பள்ளியில் நடைபெறும் விரும்ப தகாத செயல்களால் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது.

எனவே இப்பள்ளி மீது கல்வி அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி மாணவர்களின் கல்வித்தரம் குறையாத வகையில் கண்காணிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்