நீலகிரி
பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை; வங்கி ஊழியர் போக்சோவில் கைது
|கோவையில் இருந்து கூடலூருக்கு வந்த பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்: கோவையில் இருந்து கூடலூருக்கு வந்த பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பாலியல் தொல்லை
கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கடந்த மாதம் வந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவரை காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தலைமையிலான தனிப்படை போலீசார் சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் வாலிபர் ஒருவர் சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.
வங்கி ஊழியர் கைது
இதையடுத்து போலீசார் சென்னைக்கு சென்று, சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிறுமி மற்றும் வாலிபரை விசாரணைக்காக கூடலூருக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் கோவை நாகராஜபுரம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் சிறுமியை ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விஜயை போலீசார் கைது செய்தனர்.