சென்னை
பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது லாரி மோதி பிளஸ்-1 மாணவர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்
|பள்ளிக்கு சைக்கிளில் சென்றபோது லாரி மோதி பிளஸ்-1 மாணவர் பலியானார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவருடைய மனைவி பொன்னி. இவர்களுடைய மகன் லட்சுமிபதி(வயது 16). இவர், பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று காலை மாணவர் லட்சுமிபதி வழக்கம்போல வீட்டில் இருந்து தனது சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு வந்தார். முடிச்சூர் சாலையில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையொட்டியுள்ள சர்வீஸ் சாலை சந்திப்பு பகுதியில் வந்த போது பின்னால் வந்த டாரஸ் லாரி இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமிபதி, லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த சாலையில் வந்த 4 டாரஸ் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், "கடந்த வாரத்தில் இதே பகுதியில் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது 2-வதாக இந்த விபத்து நடந்துள்ளது. காலையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரி செல்லும்போது இந்த சாலையில் அதிக அளவில் லாரிகளை அனுமதிப்பதே விபத்துக்கு காரணம். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த சாலையில் போக்குவரத்து போலீசார் பணி செய்வது இல்லை" என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து போலீசார், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இதனால் தாம்பரம் -முடிச்சூர் சாலையில் ஒரு மணிநேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவரான மேற்கு தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.