திருவள்ளூர்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் பலி
|மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
பிளஸ்-1 மாணவன்
திருவள்ளூர் அடுத்த பேரத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஆகாஷ் குமார் (வயது 16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த 22-ந் தேதியன்று ஆகாஷ் குமார் அதேப்பகுதியை சேர்ந்த தனது நண்பர் கார்த்திக் (30) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்டினார். ஆகாஷ்குமார் பின்னால் அமர்ந்து சென்றார்.
விபத்து
அவர்கள் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென பிரேக் பிடித்தார். இதில் பின்னால் அமர்ந்து இருந்த ஆகாஷ் குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ்குமார் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.