< Back
மாநில செய்திகள்
தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

தினத்தந்தி
|
21 May 2023 12:45 AM IST

தக்கலை அருகே உறவினருடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தக்கலை:

தக்கலை அருகே உறவினருடன் குளிக்க சென்ற பிளஸ்-1 மாணவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-1 மாணவர்

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு, மங்காரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன், டிரைவர். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. இவர்களில் மூத்த மகன் கலாதரன் (வயது16). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-1 தேர்ச்சி பெற்றுவிட்டு பிளஸ்-2 வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் கலாதரன் தனது உறவினர் மகனான ஒரு சிறுவனுடன் வீட்டின் அருகில் உள்ள வயக்குளத்திற்கு குளிக்க சென்றார்.

குளத்தில் இருவரும் குளித்து கொண்டிருந்த போது கலாதரன் கால்சறுக்கி குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றார். குளத்தில் பாசி அதிகமாக வளர்ந்திருந்ததால் அதில் கால் சிக்கி கொண்டது. மேலும், கலாதரனுக்கு நீச்சல் தெரியாததால் நீந்தி மேலே எழும்ப முடியவில்லை.

பரிதாப சாவு

இதனை கண்டு குளித்து கொண்டிருந்த உறவுக்கார சிறுவன் சத்தமிட்டான். அப்போது அருகில் யாரும் இல்லாததால் உதவிக்கு யாரும் வரவில்லை. இதனால், அந்த சிறுவன் தகவல் சொல்ல வீட்டிற்கு ஓடி வந்தான். தகவல் அறிந்த உறவினர்கள் குளத்திற்கு ஓடி சென்றனர். அதற்குள் கலாதரன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெய்யூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி மாணவரின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

மேலும், தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளத்தில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்