கன்னியாகுமரி
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|அஞ்சுகிராமம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பிளஸ்-1 மாணவர்
அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட். இவருக்கு சகாய சின்சா என்ற மனைவியும், ஐசக் ஸ்டீபன்(வயது 16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு வலைக்கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
மகன் ஐசக் ஸ்டீபன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஐசக் ஸ்டீபன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். ஐசக் ஸ்டீபன் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். அப்போது, கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
தூக்கில் தொங்கினார்
பின்னர், பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தனது தங்கையை மோட்டார் சைக்கிளில் வலைக்கம்பெனிக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததை தாயாரிடம் தங்கை சொல்லிவிடுவார் என்றும், அதன்காரணமாக தாயார் தன்னை திட்டுவார் என்றும் ஐசக்ஸ்டீபன் பயந்துள்ளார்.
இந்தநிலையில் மாலை வேலை முடிந்து சகாய சின்சா வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் அறையில் ஐசக் ஸ்டீபன் தூக்கில் பிணமாக தொங்குதை கண்டு கதறி அழுதார்.
பின்னர், இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸிமேனகா, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ஐசக் ஸ்டீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் ஐசக் ஸ்டீபன் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.