காதலை கைவிட மறுத்ததால் ஏரியில் மூழ்கடித்து பிளஸ்-1 மாணவி கொலை - பெற்றோர் வெறிச்செயல்
|காதலை கைவிட மறுத்ததால் பிளஸ்-1 மாணவியை பெற்றோர் ஏரியில் மூழ்கடித்து கொலை செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பக்கமுள்ள பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகள் ஸ்பூர்த்தி (வயது 16). இவர், பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் இரவு பட்வாரப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் மாணவி பிணமாக மிதந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவியும், முத்தாலியை சேர்ந்த சிவா (25) என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மகளை கண்டித்துள்ளனர். ஆனால் மாணவி காதலை கைவிட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் மகளை தாக்கி, ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியதும், பெற்றோர் புகாரின்பேரில் வீடு திரும்பியதும், சிவா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாயார் காமாட்சி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் மகளை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.