< Back
மாநில செய்திகள்
உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதிமொழி
மாநில செய்திகள்

உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுதிமொழி

தினத்தந்தி
|
21 Feb 2024 9:04 AM GMT

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகத் தாய்மொழி நாளையொட்டி சட்டமன்றப் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரால் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்!

"தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ? தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ?" எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம். பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம்!

அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்!" என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்