< Back
மாநில செய்திகள்
கரை ஒதுங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கரை ஒதுங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள்

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாயல்குடி,

வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனால் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பாட்டில்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகின்றது. சாயல்குடி அருகே வாலிநோக்கம், கீழ முந்தல் முந்தல், மூக்கையூர் உள்ளிட்ட ஊர்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளும், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகும் உள்ளன. இந்த படகுகள் அனைத்தும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்று வருகின்றன.

இந்த நிலையில் மன்னார் வளைகுடாவுக்குட்பட்ட வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கடற்கரை பகுதியில் பல இடங்களில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை கணவாய் மற்றும் நண்டு பிடிப்பதற்காக மீனவர்கள் கயிறு கட்டி கடலுக்குள் கொண்டு சென்று வலைகளை சுற்றி மிதக்க பயன்படுத்தப்பட்டிருந்த பாட்டில்கள் என கூறப்படுகிறது.

மீனவர்களுக்கு விழிப்புணர்வு

தற்போது இந்த பாட்டில்கள் அனைத்தும் கடல் அலை மற்றும் நீரோட்ட வேகத்தால் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. தேசிய கடல்சார் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. இது போன்று பிளாஸ்டிக் பாட்டில்கள் கடலுக்குள் கிடப்பதால் திமிங்கலம், பெரிய சுறாக்கள், டால்பின், கடல் பசு போன்ற உயிரினங்கள் பாட்டில்களையோ அதன் மூடிகளையோ சாப்பிட்டுவிட்டால் அவை இறக்க நேரிடும். மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டும், பிளாஸ்டிக் பாட்டில்களை கடல் மற்றும் கடற்கரை பகுதியில் வீச வேண்டாம் என வனத்துறை சார்பில் மீனவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கோரிக்கை

மேலும், வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்