கடலூர்
சாலையை சீரமைக்க கோரி பா.ம.க.வினர் நாற்றுநடும் போராட்டம்
|சாலையை சீரமைக்க கோரி பா.ம.க.வினர் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
கம்மாபுரம் ஒன்றியத்தில் மேற்கிருப்பு - மணக்கொல்லை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து கிடக்கிறது. ஆனால் இதுவரைக்கும் புதிய சாலை அமைக்கவில்லை. மழைக்காலங்களில் குட்டை போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் விபத்துகளும் தொடர்கதையாகி வந்தது. எனவே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரைக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, பெய்த மழையின் காரணமாக, சாலையில் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பா.ம.க.வினர் நேற்று நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் நெடுமாறன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தன், வன்னியர் சங்க தலைவர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் சேட்டு, வழக்கறிஞர் சிவகண்டன் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராசு கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் நிர்வாகிகள் வைரக்கண்ணு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகவேல், தங்க சுப்பிரமணியன், ஜெயராமன், பிரபாகரன், கதிர்வேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, சேதமான சாலையில் தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு, கோஷங்களை எழுப்பினர்.