இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திருவள்ளுவர் உருவத்தில் நாற்று நடவு - தஞ்சை விவசாயிக்கு குவியும் பாராட்டு...!
|இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயி ஒருவர் திருவள்ளுவர் உருவத்தில் நாற்றுகளை நடவு செய்துள்ளார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி இளங்கோவன். இவர், பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
இந்நிலையில், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவிக்கும் வகையில், மலையப்பநல்லூரில் உள்ள தனது வயலில் திருவள்ளுவர் உருவம்போல நாற்றுகளை இளங்கோவன் நடவு செய்துள்ளார்.
தற்போது, கதிர்விடும் பருவத்தில் உள்ள இப்பயிர்களை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எம்.பிக்கள் சு.கல்யாணசுந்தரம், செ.ராமலிங்கம், எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, இளங்கோவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து இயற்கை விவசாயி இளங்கோவன் கூறியது:
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், குறுவை சாகுபடி செய்துள்ள ஒரு வயலில், 50 அடி நீளம், 45 அடி அகலத்தில், நேபாள நாட்டின் ஊதா நிற நெல் வகையான சின்னார் நெல் ரகத்தைக் கொண்டு, திருவள்ளுவர் உருவம்போல நடவு செய்தேன்.
தற்போது, 70 நாட்களான நிலையில் பயிர்கள் வளர்ந்து கதிர்விடும் பருவத்தில் உள்ளன. இன்னும் 45 நாட்களில் கதிர்கள் முற்றிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.