திருவாரூர்
சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம்
|வலங்கைமான் அருகே சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது.
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே உள்ள ரகுநாதபுரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த கொத்தூர் கிராமம் அரித்வாரமங்கலத்தில் இருந்து அம்மாப்பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக கொத்தூர் கிராம தார் சாலை சேதமடைந்துள்ளதால் கருங்கல் சாலையாக மாறி குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நேற்று அப்பகுதி மக்கள் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் அரித்வாரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.