திருவள்ளூர்
சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
|கடம்பத்தூர் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நூதன முறையில் நாற்றுகளை நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரம்பாக்கம்,
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் இந்திராநகர் காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சாலைகள் அனைத்தும் தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி நின்றது. மேலும் அந்த பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. அந்த பகுதி மக்கள் சாலை உள்ள கழிவு நீரை மிதித்தவாறு வெளியிடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சேறும் சகதியுமான சாலையில் தவறி விழுந்து காயமடைந்து செல்கிறார்கள்.
சாலையை சீரமைத்து தரவேண்டும் என பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் நேற்று காலை கொட்டையூர் இந்திராநகர் காலனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகே சேறும் சகதியமாக சாலையில் நூதன முறையில் நாற்றுகளை நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையை சீரமைக்க கோரியும், கழிவுநீர் கால்வாயும் அமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.