பெரம்பலூர்
பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 1 லட்சத்து 63 ஆயிரத்து 997 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்
|பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 1 லட்சத்து 63 ஆயிரத்து 997 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டது.
தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் "பசுமை தமிழகம்" இயக்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு மாவட்ட வனத்துறையின் சார்பில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா மரக்கன்று நட்டு பசுமை தமிழக இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் "பசுமை தமிழகம்" இயக்கத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 63 ஆயிரத்து 997 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய அலுவலகம் முன்பு 10 மரக்கன்றுகளும், பெரம்பலூர் வனச்சரகத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 967 மரக்கன்றுகளும், வன விரிவாக்க மையத்தில் 50 ஆயிரத்து 20 மரக்கன்றுகளும், வேப்பந்தட்டை வனச்சரகத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளும் என மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 997 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சித்தளி காப்புக்காடு, பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், விவசாய நிலங்களில் வேம்பு, புங்கன், மருது மற்றும் நாவல் போன்ற உள்நாட்டு மரக்கன்றுகள் நடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்க வேண்டும், என்றார். இதேபோல் சித்தளி காப்புக்காடு, தனியார் கல்லூரிகளில் பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நேற்று நடப்பட்டன. இதில் வனச்சரக அலுவலர்கள் பழனிகுமரன் (பெரம்பலூர்), மாதேஸ்வரன் (வேப்பந்தட்டை), சுப்ரமணியன் (சமூக வனக்காடு பெரம்பலூர்), ராஜசேகரன் (சித்தளி வன விரிவாக்க மையம்), வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.