< Back
மாநில செய்திகள்
நடவு எந்திரங்கள், களை எடுக்கும் கருவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
கடலூர்
மாநில செய்திகள்

நடவு எந்திரங்கள், களை எடுக்கும் கருவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

சம்பா சாகுபடிக்காக நடவு எந்திரங்கள், களை எடுக்கும் கருவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைகேட்பு கூட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசிய விவரம் வருமாறு:-

விவசாயி வேல்முருகன்: புவனகிரி பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் கால்நடைகளுக்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே அரியகோஷ்டி வாய்க்காலில் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும். புவனகிரி அருகில் வெள்ளாற்றின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்ட வேண்டும். சேத்தியாத்தோப்பு-கம்மாபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

கீரப்பாளையம் குஞ்சிதபாதம்:- சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்கள் அனைத்தும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வண்ணான்குடிகாடு வாய்க்காலை தூர்வாரி பராமரிக்க வேண்டும். ஸ்ரீ முஷ்ணத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை உடனே திறக்க வேண்டும் என்றார்.

3 ஆயிரம் பேருக்கு பட்டா

குமராட்சி பெண் விவசாயி ரங்கநாயகி: மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உழவு மானியம் வழங்கிட வேண்டும்.

விருத்தாசலம் கலியபெருமாள்: விஜயமாநகரத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அணை சேதமடைந்து காணப்படுகிறது. இது தொடர்பாக 4 ஆண்டுகளாக மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் என்.எல்.சி.யால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நன்மை செய்யும் பூச்சி

ஸ்ரீமுஷ்ணம் செல்வராஜ்: வெள்ளாற்றில் ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம்-கீரனூர் இடையே தடுப்பணை கட்ட வேண்டும். வேளாண்மை பொறியியல் துறையில் களை எடுக்கும் கருவியை விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். இதன் மூலம் பயிர் வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்றார்.

கம்மாபுரம் பாலமுருகன்: பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதனால் நன்மை செய்யும் பூச்சியை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம், பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகளை அழிக்க முடியும் என்று கூறினார்

அதிகாரிகள் இடமாற்றம்

நல்லூர் மணிகண்டன்: வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் மாதந்தோறும் கூட்டம் நடத்தி விவசாயிகள் என்னென்ன பயிர் சாகுபடி செய்துள்ளனர் என கேட்டு பயிர் அடங்கல் தருவதில்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த அடங்கல்படியே தற்போதும் அடங்கல் தருகின்றனர். காரணம், சில வருவாய்த்துறை அலுவலர்கள், வேளாண்மை உதவி அலுவலர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வேலை வாங்கிக் கொண்டு வந்து பணிபுரிவதால், அரசு வேலை செய்யாமல் சொந்த தொழிலில் தான் ஈடுபடுகின்றனர். எனவே சொந்த ஊரில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் வேளாண்துறை அலுவலர்களை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

நடவு எந்திரம் வேண்டும்

கடலூர் மாதவன்: சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்சாகிப் வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். தேவையான விதை, யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் நடவு எந்திரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரும்புக்கான ஊக்கத்தொகையை அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்றார்.கூட்டத்தில் வேளாண் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்