திருப்பூர்
சின்னவெங்காயம் நடவு பணி தீவிரம்
|சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்ட நிலையில் குடிமங்கலம் பகுதியில் சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
சின்ன வெங்காயம்
குடிமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் கிணற்றுப்பாசனம் மூலம் சொட்டுநீர் அமைத்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சின்ன வெங்காயம் விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வெங்காயம் விதை மூலம் நாற்றங்கால் அமைத்து 40 நாட்களுக்கு பிறகு பிடுங்கி நடவு செய்தும், விதை வெங்காயம் வாங்கியும் நடவு செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பட்டறை வெங்காயம் ஒருகிலோ ரூ. 60 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்கு அதிகரித்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.180- க்கு விற்பனை ஆகிறது.
நடைவு செய்யும் பணி
வெங்காய சாகுபடி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- ஒரு ஏக்கருக்கு 400 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல், தண்ணீர் திருப்புதல் என ஒரு லட்சம் வரை செலவாகிறது. வெங்காயமாக சாகுபடி செய்தால் சின்ன வெங்காயம் 60 முதல் 65 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். சின்ன வெங்காயம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் போது அறுவடை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுஇரண்டு நாட்கள் வெயிலில் உலர வைக்கப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் தற்போது ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையாகி வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து விலை உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே சின்ன வெங்காயம் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் இவ்வாறு அவர் கூறினார்.