அரியலூர்
போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
|போலீஸ் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
தாமரைக்குளம்:
சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், தூய்மையான காற்று கிடைக்கவும் அரியலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களை பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் வகையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணியை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார். குறிப்பாக பறவைகளுக்கு உணவு அளிக்கும் வகையில் சப்போட்டா, மாதுளை, கொய்யா, மா உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா பேசுகையில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் பசுமை போலீஸ் நிலையங்களாக மாற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 18 போலீஸ் நிலையங்களில் முதல் கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காவலர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி காவல்துறைக்கு சொந்தமான இடங்களில் சுமார் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி ஆரி, மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் ஆயுதப்படை போலீஸ் ஆளினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் சோலைவனம் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.