திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்
|திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று மாவட்ட வன அலுவலர் அருண்லால் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது என்று மாவட்ட வன அலுவலர் அருண்லால் தெரிவித்து உள்ளார்.
27 லட்சம் மரக்கன்றுகள்
சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வன அலுவலர்களான மாநாட்டில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் பங்கேற்றார். இது குறித்து அவர் தினத்தந்திக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த பரபரப்பளவில் 23 சதவீதம் வனப் பகுதியாகும். மாவட்டத்தில் 11 வனச்சரகங்கள் உள்ளன.
பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் தமிழகத்தில் வனப் பகுதியை அதிகப்படுத்த முதல்- அமைச்சர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் திருவண்ணாமலையில் மாவட்டத்தில் 23 சதவீதமாக உள்ள வனப் பகுதியை 33 சதவீதமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கடந்த 2022- 23-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது.
தற்போது 2023- 24-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் மூலம் 27 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறையின் மூலம் நடப்பட உள்ளது.
கடுமையான நடவடிக்கை
முந்தைய ஆண்டுகளை விட கடந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் வனப்பகுதியில் தீ விபத்து குறைந்து உள்ளது. இருப்பினும் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படாதவாறு கண்காணிக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை விரைந்து அணைக்கும் வகையில் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருகின்றது. அதனால் வனப்பகுதியில் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் புதியதாக பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு வருவதோடு பழுதான தடுப்பணைகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்க இரவு நேரங்களில் வனப்பகுதியில் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மீண்டும் மஞ்சப்பை திட்டம்
மேலும் ஜமுனாமரத்தூரில் உள்ள பீமன் நீர் வீழ்ச்சி பகுதியில் வனத்துறையின் சார்பில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. போளூரில் உள்ள குள்ளர் குகையையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இந்த திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு வனத்துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படும்.
கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. மான்களுக்கு பொதுமக்கள் உணவுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் வனப்பகுதியில் மான்கள் வெளியே வராத வகையில் வனப்பகுதியை சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட உள்ளது. வன விலங்குகளுக்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் வழங்குவதை தவிர்ப்பது குறித்து தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.