ராமநாதபுரம்
50 லட்சம் மிளகாய், கத்தரி நாற்றுகள்
|50 லட்சம் மிளகாய், கத்தரி நாற்றுகள் தயாராக உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையான் மற்றும் ஓரியூர் பகுதியில் அரசின் தோட்டக்கலை சார்பில் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஓரியூர் தோட்டக்கலை பண்ணையில் வரும் பருவ காலத்திற்கு ஏற்பட நாற்றுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மிளகாய் சம்பா, வீரிய ஒட்டு ரக கத்தரி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நாற்றுகள் அனைத்தும் உரிய பராமரிப்புடன் சான்று பெற்ற நாற்றுகள் என்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர். மிளகாய் சம்பா நாற்றுகள் மற்றும் வீரிய ஒட்டுரக கத்தரி ஆகியவை தற்போது வடகிழக்கு பருவமழை சமயத்தில் பயிரிட்டால் நன்றாக விளையும் தன்மை கொண்டது. உரிய ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நாற்றுகளை தோட்டக்கலைத்துறையினர் உருவாக்கி உள்ளனர். இந்த நாற்றுகளை தேவைப்படும் விவசாயிகள் ராமநாதபுரம் தோட்டக்கலை துறை இணை இயக்குனரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.