பெரம்பலூர்
புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்க திட்டம்-போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
|புதிதாக 2 ஆயிரம் பஸ்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பஸ் சேவைகள் எங்காவது நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தால் கண்டிப்பாக அந்த சேவையினை தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பஸ் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா காலக்கட்டத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து தங்களது படிப்பினை தொடரலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 625 பேரும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 125 பேரும், இதர போக்குவரத்து கழகத்திற்கு தேவைக்கேற்ப பணியாளர்களை நிரப்பவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
15 ஆண்டுகள் நிறைவடைந்த பஸ்களை இயக்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் நிறைவடைந்த பஸ்களை உடனடியாக கழிவு செய்தால் பல்வேறு பகுதிகளுக்கு பஸ் வசதி தடைபடும். எனவே புதிய பஸ்கள் வாங்கி 6 மாத கால சோதனை ஓட்டம் நிறைவடைவதற்குள் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பஸ்கள் படிப்படியாக கழிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.