காஞ்சிபுரம்
குன்றத்தூரில் 11 இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க திட்டம் - கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
|குன்றத்தூரில் 11 இடங்களில் பாதாள சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
குன்றத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்த வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை பெருநகர தென்பகுதிக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக விரைவான திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம் குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெருநகர தென்பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டத்திற்காக நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள 11 ஊராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரித்தல் தொடர்பாகவும் அங்குள்ள நீர்நிலைகள் மாசுபாட்டை தவிர்க்கும் வகையில் திட்டமிடல் மற்றும் கட்டமைப்பு குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்...
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட 11 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கும் போது எந்த பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மேலும் எந்தெந்த ஊராட்சிகளை இந்த பாதாள சாக்கடை திட்டத்தோடு இணைப்பது உள்ளிட்ட விவரங்கள் ஆலோசிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முடிக்கவும் அதற்காக பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, நகராட்சி கமிஷனர் குமாரி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.