< Back
மாநில செய்திகள்
தஞ்சையில், சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது- தொல்லியல் துறை இணை இயக்குனர்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தஞ்சையில், சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது- தொல்லியல் துறை இணை இயக்குனர்

தினத்தந்தி
|
2 Jun 2023 12:45 AM IST

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசின் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறினார்.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என்று தமிழக அரசின் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறினார்.

களப்பயிற்சி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கான களப்பயிற்சி 10 நாட்கள் தஞ்சை மணிமண்டபத்தில் உள்ள ராஜராஜன் அகழ்வைப்பகத்தில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் தொல்லியல் துறை ஓய்வு பெற்ற இயக்குனர் ஜெயராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சி வகுப்பினை தமிழக அரசின் தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு பின்பு அருங்காட்சியகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையிலான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

8 இடங்களில் அகழாய்வு

தமிழகத்தில் தற்போது கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல, கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர் மாவட்டம்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி மாவட்டம்), வெம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), பூதிநத்தம் (தருமபுரி மாவட்டம்), கீழ்நமண்டி (திருவண்ணாமலை மாவட்டம்) உள்பட 8 இடங்களில் அகழாய்வு பணி நடைபெறுகிறது.

தற்போது மக்களிடம் தொல்லியல் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், தொல்லியல் பட்டப்படிப்புகள் படிப்பதற்கு நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் முன் வருகின்றனர். இதையொட்டி, தொல்லியல், கல்வெட்டியல், பாரம்பரிய மேலாண்மை மற்றும் அருங்காட்சியகம் ஆகிய 3 பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்தி வருகிறது.

வல்லுனர்கள் பயிற்சி

இதில், படிக்கும் மாணவர்களுக்கு தஞ்சை மணிமண்டபத்திலுள்ள அகழ்வைப்பகத்தில் களப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், மாணவர்களுக்கு வரலாற்று நினைவு சின்னங்கள், பழங்கால கோவில்களை பாதுகாத்தல், புதுப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பாக தொடர்புடைய வல்லுனர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல்துறை அதிகாரிகள் சாய்பிரியா, உமையாள், பாக்கியலட்சுமி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்