< Back
மாநில செய்திகள்
குளிக்க சென்றபோது பரிதாபம்:   கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
தேனி
மாநில செய்திகள்

குளிக்க சென்றபோது பரிதாபம்: கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

தினத்தந்தி
|
30 Nov 2022 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே குளிக்க சென்றபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

8-ம் வகுப்பு மாணவன்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி எஸ்.வி.எஸ். நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மகன் அபிஷேக் (வயது 13). இவன், சக்கம்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கனமழை காரணமாக நேற்று தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் வீட்டில் இருந்த அபிஷேக், தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமிபுரம் பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றான்.

கிணற்றில் மூழ்கி சாவு

கிணற்றில் இறங்கி நண்பர்கள் அனைவரும் ஆனந்தமாய் குளித்து ெகாண்டிருந்தனர். நீச்சல் தெரியாததால் அபிஷேக் மட்டும் கிணற்றில் உள்ள படிக்கட்டில் இருந்து குளித்தான்.

அப்போது திடீரென கால் வழுக்கி அபிஷேக் கிணற்றில் விழுந்தான். இதில் அவன் தண்ணீரில் தத்தளித்தான். இதைப்பாா்த்த அவனது நண்பர்கள், அபிஷேக்கை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து கிணற்றில் இருந்து மேலே வந்த நண்பர்கள், அங்கிருந்த தோட்ட உரிமையாளர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கிணற்றில் குதித்து அபிஷேக் உடலை மீட்டு கொண்டு வந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வைகை அணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற பள்ளி மாணவன், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்