ஈரோடு
அந்தியூர் அருகே பரிதாபம்...! பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை சாவு
|அந்தியூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
அந்தியூர்
அந்தியூர் அருகே பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தை
அந்தியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 29). இவருடைய மனைவி சிம்ரான் (28). இவர் அதே பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சையத் அத்னான் (3).
சிம்ரான் வேலைக்கு செல்லும்போது சையத் அத்னானையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். அதேபோல் அவர் கடந்த 2-ந் தேதி வேலைக்கு சென்றபோது மகனை அழைத்து சென்றார். சையத் அத்னானை சிம்ரான் அருகே உள்ள தோட்டத்தில் விட்டுவிட்டு வேலை பார்த்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது சையத் அத்னான் தோட்டத்தில் காலியாக கிடந்த பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவை எடுத்து அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்து குடித்துவிட்டான். இதனால் குழந்தை வயிற்று வலியால் அலறி துடித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சையத் அத்னானுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சையத் அத்னான் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூச்சிக்கொல்லி மருந்து டப்பாவில் தண்ணீர் குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.